குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 5:16 AM IST (Updated: 19 Aug 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக சட்ட சபைக்கு தேர்தல் நடந்தது.

இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை கவர்னர் வஜூபாய் வாலா வழங்கினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மூன்றே நாட்களில் எடியூரப்பா பதவி விலகினார். அதன் பிறகு காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

அவர் 14 மாதங்கள் ஆட்சி நடத்தினார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதனை தொடர்ந்து கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி பதவி ஏற்றார்.

இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட பாஸ்கர்ராவ், கமிஷனர் பதவிக்காக ஒரு கட்சியின் பிரமுகருடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா புகார் கூறியது.

பா.ஜனதா, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சித்தராமையா, அவரது உதவியாளர்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், உயர் அதிகாரிகள் என மொத்தம் 300 பேரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, முன்னாள் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் உள்ளிட்ட பலர் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்த குமாரசாமி, யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்கவில்லை என்றும், அதுதொடர்பான புகார் உண்மைக்கு புறம்பானது என்றும், எத்தகைய விசாரணைக்கும் தயார் என்றும் கூறினார்.

கர்நாடக அரசியலில் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் குறித்து காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உள்பட பல்வேறு தலைவர்கள் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்துள்ளேன். இதுபற்றி நாளையே (அதாவது இன்று) உத்தரவு பிறப்பிப்பேன்.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாநில மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கர்நாடகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜனதா கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது இதே போல் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அப்போது ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story