குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில், 10 கி.மீ. தூரம் நடந்து சென்று குளங்களில் கலெக்டர் ஆய்வு


குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில், 10 கி.மீ. தூரம் நடந்து சென்று குளங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள குளங்களில் சுமார் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். அந்த குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தூர்வாரும் பணிகளை தொடங்குமாறு அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறுபாசன குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வார ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சில குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கலெக்டரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதையடுத்து குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ள குளங்களை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அன்புசெல்வன் நேரில் சென்றார்.

அங்கு அவர் வரதராஜன்பேட்டை பெருமாள் கோவில் குளம், பூதம்பாடி செண்பகம் ஏரி, கோரணப்பட்டு பேக்காநத்தம் நத்தமுட்டான் ஏரிமன்னார் குளம், பெரியகோவில் குப்பம் சின்ன சித்தேரி குளம், தீர்த்தகுளம் ஆகிய குளங்களில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

இதுபற்றி கலெக்டர் அன்புசெல்வன் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 80 சிறு பாசன குளங்கள், 1,363 குளம், குட்டைகள் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தூர்வாரப்பட உள்ளது. இவற்றில் 63 சிறுபாசன குளங்களை தூர்வார நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 17 சிறுபாசன குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தெரியவந்ததால் நானே நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி 6 குளங்களை ஆய்வு செய்தேன். அந்த குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தூர்வாரினால் தான் தண்ணீரை சேமிக்க முடியும், இல்லையேல் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தூர்வாரும் பணிகளை தொடங்குமாறு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு உத்தரவிட்டு உள்ளேன். இப்பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, தாசில்தார் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story