குண்டடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் மனு


குண்டடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் மனு
x
தினத்தந்தி 20 Aug 2019 3:45 AM IST (Updated: 19 Aug 2019 7:37 PM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ்வசதி செய்து தர வேண்டும் என்று கலெக்டரிடம் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர், வி.ஆர்.பி. நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதிகளில் 250–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான 3 அடுக்கு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த கட்டிடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த பழைய கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் அளித்த மனுவில், குண்டடம் ஊராட்சிக்குட்பட்ட தாயம்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கொழுமங்குழி, பீலிக்காம்பட்டி, மரவபாளையம், செம்மம்பாளையம், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், கம்மாளபாளையம், வேங்கிபாளையம், ஒரம்பப்புதூர், கருக்காம்பாளையம் உள்பட 25–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தியும், மருத்துவமனையின் தரத்தை உயர்த்தியும், அனைத்து நோய்களுக்கு படுக்கை வசதியுடன் 24 மணி நேரமும் செயல்பட்டால் இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய பொதுமக்களும் பயன் அடைவார்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.

தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 1997–ம் ஆண்டு முதல் தொலை தொடர்பு துறையில் பல ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறோம். இதைதொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக நாங்கள் உழைத்து வந்தோம். ஆனால் எங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பள தொகையும், இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு தொகையும் கிடைக்க வில்லை. மேலும் ஆள் குறைப்பு நடவடிக்கையும், கட்டாயப்படுத்தி வருகிறார்கள். எனவே ஆள் குறைப்பு நடவடிக்கையை நிறுத்தி, பணி நிரந்தரம், மற்றும் நிலுவை தொகையை பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.

Next Story