பொங்கலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தின் கம்பி வேலியை சேதப்படுத்திய ஆசாமிகள்; போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


பொங்கலூர் அருகே அரசு பள்ளி மைதானத்தின் கம்பி வேலியை சேதப்படுத்திய ஆசாமிகள்; போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 9:44 PM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் கம்பி வேலிகளை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

பொங்கலூர்,

பொங்கலூர்அருகே உள்ள வடக்கு அவினாசிபாளையத்திற்கு உட்பட்ட ராமம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி தலைமை ஆசிரியை சித்ராதேவி உள்பட 8 ஆசிரியர்களும், 134 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பள்ளியின் எதிரில் இருந்த புறம்போக்கு நிலத்தில் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக 27 சென்ட் இடம் ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. எனவே பல ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தால் சிரமப்பட்டு வந்த மாணவர்களுக்கு இடம் ஒதுக்கி கொடுத்ததில் மகிழ்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டு விளையாட்டு மைதானத்திற்கு பாதுகாப்பாக கம்பி வேலியும், மரக்கன்றுகளையும் நட ஏற்பாடு செய்தனர்.

அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ரூ.3 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானத்திற்கு கம்பி வேலி அமைத்தனர். மேலும் அந்த மைதானத்தில் 73 மரக்கன்றுகளும் நட்டு அதற்கு சொட்டு நீர்பாசன வசதியும் செய்தனர். இந்த நிலையில் இங்கு கம்பி வேலி அமைக்க அந்த பகுதியில் குடியிருக்கும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அரசின் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் கம்பி வேலி அமைக்கப்படுவதால் எதிர்ப்பை யாரும் பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து பார்த்தபோது விளையாட்டு மைதானத்தின் கம்பி வேலி உடைக்கப்பட்டு மரக்கன்றுகள் பிடுங்கி எறிந்தும், போர்டு கீழே விழுந்தும், சொட்டு நீர் பாசன குழாய்கள் சேதப்படுத்தப்பட்டும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்பொதுமக்களுக்கு தெரியவந்ததால் பள்ளி முன்பு ஒன்று திரண்டனர். மேலும் கம்பி வேலியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியை சித்ராதேவி மற்றும் ஊர்பொதுமக்கள் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு புகார் கொடுத்த பின்பு இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். ஆனால் மாலை வரை புகார் பதிவு செய்யாததால் பொதுமக்கள் அனைவரும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் போலீஸ் நிலையத்தின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story