டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு


டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 5:17 PM GMT)

டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா பாசனத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் கடந்த 17-ந் தேதி கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது.

காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் வினாடிக்கு தலா 1,000 கன அடியும், கல்லணைக்கால்வாயில் 500 கன அடியும் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல வாய்ப்பு இல்லாததால் கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கூடுதல் தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் கல்லணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் 2,632 கன அடியும், வெண்ணாற்றில் 2,333 கன அடியும், கல்லணைக்கால்வாயில் 1,055 கன அடியும், கொள்ளிடத்தில் 3,004 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியாக உள்ளது. வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story