சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது


சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதுகுடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சோழங்கநல்லூர் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதியின்றி சோழங்கநல்லூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி. சோழங்கநல்லூரில் ராஜ்பாலன் என்பவர் தலைமையில் போராட்டக்குழு அமைத்து நேற்று முதல் 10 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது.

6 பேர் கைது

அதன்படி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் சாலை முகப்பில் பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இனிக்கோதிவ்வியன், பழனிச்சாமி, கார்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், மன்னார்குடி தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உண்ணாவிரத பந்தலை பிரித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் போராட்டக்குழு தலைவர் ராஜ்பாலன்(வயது56), செல்வம் (46), ரமேஷ் (42), பிச்சைக்கண்ணு(55), முருகானந்தம் (46) சரவணன் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story