கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை


கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கர்ப்பமாக்கிவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் (வயது 54). இவரது மகள் நந்தினி (19). இவர் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில், வெள்ளேரிதாங்கல் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் நந்தினியை காதலித்து அவரிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் நந்தினி கர்ப்பமானதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தினேசிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நந்தினி கூறியுள்ளார். ஆனால் நந்தினியிடம் சரிவர பேசாமல் தினேஷ் தவிர்த்து வந்ததாக தெரிகிறது.

மேலும் அவர் தன்னுடைய உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இதனை அறிந்து வேதனை அடைந்த நந்தினி காதலன் தன்னை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி கைவிட்டதால் விரக்தியில் அழுது புலம்பினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நந்தினியின் பெற்றோர் வெளியே சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த நந்தினி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து லட்சுமிகாந்தன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். அதில், தன்னுடைய மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story