ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் பெய்துவரும் தொடர்மழைக் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஓசூர்,
கர்நாடகாவில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போதைய அணையின் நீர்மட்டம் 41.49 அடி ஆகும். நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 568 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்தநிலையில், நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக 808 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனபள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கர்நாடக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story