ஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதி மீது தாக்குதல்; 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்


ஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதி மீது தாக்குதல்; 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 20 Aug 2019 12:00 AM GMT (Updated: 19 Aug 2019 6:48 PM GMT)

ஊத்துக்குளி அருகே நன்கொடை கொடுக்காததால் தம்பதி மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஊத்துக்குளி,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 40). இவருடைய மனைவி அன்னபூர்ணா (32). இவர்கள் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ எஸ்.சி.புதூர் பகுதியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்டு கடை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கடையில் சிவானந்தம், அன்னபூர்ணா, இவர்களின் 10 வயது மகள் மற்றும் அன்னபூர்ணாவின் தம்பி சிவா ஆகியோர் இருந்தனர்.

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் இவர்களுடைய கடைக்குள் புகுந்து, அங்கு இருந்த சிவானந்தம் மற்றும் அன்னபூர்ணாவிடம் “ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உள்ளோம், அதற்கு ரூ.1000 நன்கொடை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது அன்னபூர்ணா, ஏற்கனவே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட போவதாக ஒரு அமைப்பினர் வந்து ரூ.300 நன்கொடை வாங்கிச்சென்றனர். மீண்டும் வந்து நன்கொடை என்று பணம் கேட்டால், நாங்கள் என்ன செய்வது? பணத்திற்கு எங்கே போவது? என்று கூறியுள்ளார்.

அப்போது அந்த 5 பேரில் ஒரு வாலிபர், எங்களுக்கு நன்கொடை தரவில்லை என்றால் கடையை நடத்த முடியாது? கடையை உடைத்து நொறுக்கி விடுவோம் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவர் அன்னபூர்ணாவையும், அவருடைய கணவர் சிவானந்தத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கடையில் இருந்த அன்னபூர்ணாவின் தம்பி சிவா, அவர்கள் இருவரையும், பாதுகாப்பாக கடையின் உள்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசில் சிவா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சிவானந்தத்தையும், அன்னபூர்ணாவையும் தாக்கியவர்கள் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், வசந்த், நாசர் அலி, ரஞ்சித் மற்றும் அய்யாசாமி என தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நன்கொடை கொடுக்காததால் 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து தம்பதியை தாக்கிய சம்பவம் கடைக்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story