மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை


மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை
x
தினத்தந்தி 20 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மின் விளக்குகள் சரிவர எரியாததால், இருளில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பல்லவன் சிலை பகுதியில் இருந்து தமிழ்நாடு ஓட்டல் பகுதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுப்பகுதியில் பகலை இரவாக்கும் வகையில், அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பில் 100 மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த 4 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த மின்கம்பத்தில் சில நாட்களுக்கு முன்பு வரை மின்விளக்கு பிரகாசமாக எரிந்தது. இதன் காரணமாக இரவு நேரத்தில், அங்கு செல்லும் கனரகவாகனங்கள் முதல் சிறிய வாகன ஓட்டிகள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்த சூழ்நிலையில், இத்தகைய பிரகாசமான விளக்குகளால் அரசுக்கு மின்சார கட்டணம் மூலம் லட்சக்கணக்கில் செலவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, எந்த வித முன்அறிவிப்புமின்றி அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்விளக்குகள் காட்சி பொருளாக மாறின.

இதன் காரணமாக தற்போது இரவு நேரங்களில் அப்பகுதி போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி வாகனங்களை ஓட்டி வருவதால், இங்கு அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக மோதி விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

மேலும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் இருந்து, அரசு பேருந்தில் இப்பகுதிக்கு வரும் பயணிகள் பைபாஸ் சாலையில் இறங்கி வரும்போது, இருள் சூழ்ந்த இந்த பகுதியை கடந்து ஊருக்குள் செல்ல வேண்டி உள்ளது. இதனை பயன்படுத்தி தனியாக நடந்து வரும் பெண்களிடம் வழிப்பறி திருடர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். போலீசாரின் சோதனைச்சாவடி அந்த பகுதியில் இருந்தும், இருள்சூழ்ந்து காணப்படுவதால் அங்கு நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர். அதேபோல் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும் ஒரு வித அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து மாமல்லபுரம் நகருக்குள் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது.

எனவே அரசின் சாலை போக்குவரத்து நிறுவனம் முக்கியமான இந்த கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்துள்ள மின் விளக்குகள் இரவு நேரங்களில் தொடர்ந்து எரியும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story