2 பெண்களை மணந்து விட்டு சிறுமியையும் திருமணம் செய்தவர் கைது


2 பெண்களை மணந்து விட்டு சிறுமியையும் திருமணம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 5:00 AM IST (Updated: 20 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

அக்காள், தங்கையை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் உறவுக்கார சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று 3-வதாக திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது கரிச்சான்குண்டு. இந்த ஊரைச்சேர்ந்த பூபாலன் என்பவரது மகன் பாண்டி(வயது35). சமையல் அறை வடிவமைப்பு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர் பெரியபட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முதல் மனைவியின் தங்கையின்மேல் ஆசை கொண்டு அவரையும் காதலித்து வீட்டை விட்டு அழைத்துச் சென்று பனைக்குளம் பகுதியில் தோப்பு ஒன்றில் வீடுபிடித்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அக்காள் மற்றும் தங்கையை திருமணம் செய்ததால் அடிக்கடி குடும்பத்திற்குள் சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் பாண்டி கரிச்சான்குண்டு பகுதியில் உள்ள பூர்வீக இடத்தினை பராமரிப்பதற்காக வந்துள்ளார். அப்போது உறவுக்காரரின் மகளான 16 வயது சிறுமியின் மீது பாண்டியின் கண்பட்டுள்ளது. சிறுமி டிக்டாக் மற்றும் வாட்ஸ்அப்பில் மூழ்கி கிடந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாண்டி அதன் மூலம் தனது தொடர்பை ஏற்படுத்தி சிறுமியை தன் வலையில் வீழ்த்தியுள்ளார். பாண்டியின் ஆசைவார்த்தையில் மயங்கிய சிறுமி பாண்்டியோடு சேர்ந்து வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். போகும்போது வீட்டில் இருந்த 20 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டாராம்.

பாண்டி சிறுமியை அழைத்து செல்லும்போது வீடு எடுத்து தங்குவதற்கு வசதியாக மூத்த மனைவியின் பெண் குழந்தை, 2-வது மனைவியின் ஆண் குழந்தையையும் உடன் அழைத்து சென்றுள்ளார். 16 வயது சிறுமியை நகைகளுடன் காணாமல் பெற்றோர் தவித்து வந்துள்ளனர். குழந்தைகளை காணாமல் பாண்டியின் மனைவிகள் தவித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக இவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனிடையே பாண்டி சிறுமியை அழைத்துச் சென்று பழனியில் வைத்து திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் விடுதி ஒன்றில் தம்பதி என்ற பெயரில் தங்கி உள்ளார்.

மேலும் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் மனைவியிடம் செல்போனில் பேசியபோது, தன்னிடம் தான் குழந்தைகள் உள்ளனர் என கூறியுள்ளார். அவரின் செல்போன் பேச்சின் அடிப்படையில் போலீசார் தஞ்சாவூர் சென்று பஸ் நிலையம் பகுதியில் வைத்து பாண்டியை மடக்கி பிடித்தனர்.

குழந்தைகளை மீட்டு அவரவர் தாய்மார்களிடம் சேர்த்தனர். பாண்டி 3-வதாக திருமணம் செய்த சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவரை அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story