புதுஆற்றுக்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை


புதுஆற்றுக்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

புதுஆறு என அழைக்கப்படும் கல்லணை கால்வாய்க்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அய்யம்பேட்டை,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணை நிரம்பினால் தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என 3 போக நெல் சாகுபடியையும் சிரமமின்றி மேற்கொள்ள முடியும்.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணை வந்ததும் காவிரி, கொள்ளிடம், புதுஆறு எனப்படும் கல்லணை கால்வாயில் திறந்து விடப்படும் வழக்கம். இதில் புதுஆறு தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. புதுஆற்றில் முழு கொள்ளளவு தண்ணீர் சென்றால் தான் கடைமடை பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும். மேலும் வானம் பார்த்த பூமியையும் வளமாக்கும் ஆறாக புதுஆறு திகழ்கிறது.

ராஜராஜ சோழன்

இந்த ஆற்றுக்கு தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அய்யம்பேட்டையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் என்.செல்வராஜ், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையை கட்டிய அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னர் ஸ்டேன்லியின் செயலாக்க குழுவில் நியமன உறுப்பினராக இருந்தவர் சர்.சி.பி.ராமசாமி அய்யர். இவர் சுதந்திரத்திற்கு பின் கும்பகோணம் தொகுதி எம்.பி.யாக இருந்த சி.பி. பட்டாபிராமனின் தந்தை. காவிரியில் மேட்டூர் அணை கட்ட தொடங்கியதும் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் எண்ணத்தில் தோன்றிய தொலைநோக்கு திட்டம் தான் புது ஆறு என்னும் கல்லணை கால்வாய்.

வானம் பார்த்த பூமி

இந்த ஆறு வெட்டப்பட்டதன் முதன்மை நோக்கம் தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதியையும், ஆற்றுப்பாசனம் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்தையும் விவசாயத்தில் மேம்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது ஆகும். புதுஆறு மூலமாக வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, சேதுபாவாசத்திரம், ஆவுடையார்கோவில், மதுக்கூர், திருபுவனம் ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றின் பாசன பகுதியாக மாறின.

இந்த ஆறு கல்லணையின் தென்புறத்தில் தன் பயணத்தை தொடங்குகிறது. மன்னர்கள் காலத்திற்கு பின் வெட்டப்பட்ட மிகப்பெரிய பாசன ஆறு இதுவாக தான் இருக்கமுடியும். இந்த ஆற்றை தஞ்சை நகருக்கு வர செய்யாமல் ஆலக்குடியில் இருந்து தெற்கு நோக்கி திருப்பி திட்டமிடப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்றிருக்க முடியும்.

அகழியுடன் இணைப்பு

ஆனால் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் கனவு இந்த ஆற்றை தஞ்சை பெரிய கோவிலை ஒட்டியே கொண்டு செல்ல வேண்டும் என்பதே ஆகும். அதன்படி பெரிய கோவிலின் தென்புற அகழி இந்த ஆற்றுடன் இணைக்கப்பட்டது. மேல்புறம் உள்ள அகழிக்கும் தண்ணீர் குழாய் மூலம் கொண்டு செல்ல வழி வகுக்கப் பட்டது.

இந்த ஆற்றின் வரவால் தஞ்சையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததோடு, சுற்றுச்சூழலும் செம்மை ஆனது. தஞ்சை டெல்டாவில் உள்ள மற்ற இயற்கையான ஆறுகளை விட இந்த ஆறு நீளமானது. ஆங்கிலேயர் காலத்தில் 110 கிலோ மீட்டர் நீளமும், பின்னர் 40 கிலோ மீட்டர் நீளமும் நீட்டிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளையும் இந்த ஆறு வளப்படுத்துகிறது. விநாடிக்கு 4 ஆயிரத்து 100 கன அடி நீரை தாங்கி செல்லும் கொள்ளளவு கொண்டது இந்த ஆறு.

வியப்புக்குரிய செய்தி

மற்ற ஆறுகளை போல் தண்ணீரை வீணாக்காமல் முழுக்க முழுக்க விவசாயத்திற்கு மட்டுமே இந்த ஆற்றின் தண்ணீர் பயன்படுகிறது. இந்த ஆறு பெரிய கோவில் பகுதியில் 30 அடி ஆழத்திலும், ஒரத்தநாடு, திருவோணம் பகுதியில் 30 அடி உயரத்திலும் செல்வதை பார்க்க முடிகிறது. அதாவது சம தரையில் இருந்து படிப்படியாக, மேடான பகுதிகளுக்கு ஆறு உயர்த்தப்பட்டது என்பது வியப்பிற்குரிய செய்தியாகும்.

இயற்கையான ஆறுகள் பள்ளம் நோக்கி பாய்கையில் இந்த செயற்கையான புது ஆறு புதுமையாக பள்ளத்திலிருந்து மேடான பகுதியை நோக்கி ஓடுமாறு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இது தமிழக நீர்ப்பாசன திட்டத்தின் முழுமையான வெற்றியாக கருதப்படுகிறது. தெலுங்கானாவில் சமீபத்தில் பயன்பாட்டிற்கு வந்த காலேஷ்ரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு புது ஆறு வடிவமைக்கப்பட்ட திட்டத்தை முன்னோடியாக கருதலாம்.

குளங்களுக்கு ஆதாரம்

தஞ்சை மாவட்டத்தில் 526 குளங்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 குளங்களுக்கும் புதுஆறே நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் இந்த 2 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் புதுஆறு மூலமாக பாசன வசதி பெறுகிறது.

இப்படிப்பட்ட அதிசயங்கள் நிறைந்த ஆறு இந்தியாவில் இது ஒன்றாகத்தான் இருக்கும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கல்லணை கால்வாய்க்கு ராஜராஜ சோழன் ஆறு என பெயர் சூட்டி அழைப்பது இந்த ஆற்றுக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாகவும், மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு பெருமை சேர்ப்பதாகவும் அமையும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story