தாம்பரம், செங்கல்பட்டு பகுதியில் வடமாநில சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் அதிர்ச்சி தகவல்கள்


தாம்பரம், செங்கல்பட்டு பகுதியில் வடமாநில சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 20 Aug 2019 3:45 AM IST (Updated: 20 Aug 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம், செங்கல்பட்டில் வடமாநிலத்தை சேர்ந்த சிறுமிகளை மர்மகும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு,

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களாக வடமாநில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபத்தி வருவதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில், வடமாநிலத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் மாற்றுத்திறனாளிகள் போல் கையில் ஊன்றுகோலை வைத்து சுற்றி திரிந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அந்த சிறுமிகளை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மாற்றுத்திறனாளிகளை போல் நடித்தது தெரியவந்தது. மேலும், மர்ம கும்பல் ஒன்று அந்த சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

அந்த சிறுமிகளிடம் இருந்து போலி ஆதார் கார்டுகள், போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் செங்கல்பட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதிகாரிகள், அந்த சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

மராட்டிய மாநிலம் மற்றும் பல்வேறு வடமாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை இடைத்தரகர்கள் மூலமாக அழைத்து வரும் அந்த மர்மகும்பல் சென்னையின் பல்வேறு இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகள்போல் நடிக்க வைத்து சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடூர செயலை அந்த கும்பல் அரங்கேற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

சிறுமிகளை அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் யார்? இதன் பின்னணியில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எத்தனை சிறுமிகளை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்? என்பது குறித்து குழந்தைகள் நல குழுமத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story