சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் வந்த காட்டுநாயக்கர் மக்கள்


சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் வந்த காட்டுநாயக்கர் மக்கள்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 7:37 PM GMT)

சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் காட்டு நாயக்கர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

மதுரை பழங்குடி நாடோடிகள் அமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காட்டு நாயக்கர் இன மக்கள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். இவர்கள் அனைவரும் தங்களின் குலத்தொழிலான பாம்பு பிடிப்பதை நினைவுகூரும் வகையில் பாம்புகளுடன் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து கூட்டமைப்பு தலைவர் மகேஸ்வரி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களது குழந்தைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளனர். மேல்படிப்பு மேற்கொள்ள காட்டுநாயக்கன் எனப்படும் பழங்குடி சாதி சான்றிதழ் இல்லாததால் இந்த நிலை உள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மானுடவியல் பேராசிரியர் மூலமாக பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களை ஆய்வு செய்து அதன்அறிக்கையின் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுநாயக்கர்கள் வாழும் மேலபார்த்திபனூர், பரமக்குடி லீலாவதி நகர் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் நாங்கள் காட்டுநாயக்கர் சான்றிதழ் பெற முடியவில்லை. சாதி சான்றிதழ் பெறமுடியாததால் கல்வி கற்க முடியாமல் எங்கள் குழந்தைகள் இரும்பு கடை உள்ளிட்டவைகளில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் பாம்பு பிடிக்கும் குலத்தொழிலையே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களின் சந்ததியினர் எதிர்காலம் கருதி காட்டுநாயக்கன் சாதிசான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இந்த மாத இறுதிக்குள் நேரில் ஆய்வு செய்து காட்டுநாயக்கர் என்பது உறுதியானால் சாதி சான்றிதழ் வழங்குவதாக உறுதிஅளித்தார். முன்னதாக காட்டுநாயக்கர்கள் பாம்புகளுடன் வந்ததால் அந்த பாம்புகள் கலெக்டர் அலுவலக வளாக பகுதிகளில் சீறி படம் எடுத்து ஆடியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story