பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்று தர வேண்டும்; குறை தீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை


பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட  கியாஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்று தர வேண்டும்; குறை தீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2019 3:30 AM IST (Updated: 20 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்களை திரும்ப பெற்று தர வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் போன்றவை கேட்டு 600-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

குறை தீர்வு கூட்டத்திற்கு வந்த பொதுமக்களின் மனுக்களை பதிவு செய்ய கால தாமதம் ஏற்பட்டதால் வெயிலில் 1 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் மனுவை பதிவு செய்து கூட்டத்தில் வழங்கினர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

சேத்துப்பட்டு தர்மராஜா கோவில் தெருவில் உள்ள பாஞ்சாலியம்மன் பராமரிப்பு மற்றும் பரிபாலன அறக்கட்டளை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட 11-வது வார்டு தர்மராஜா கோவில் தெருவில் அமைந்திருக்கும் பாஞ்சாலி அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு சொந்தமாக குளம் மற்றும் கோவில் இடம் 1 ஏக்கருக்கு மேல் இருந்து வந்து உள்ளது.

கோவிலுக்கும், குளத்திற்கும் நடுவே தகரத்தால் வேலி அமைத்து குளம் மற்றும் கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். எனவே கோவில் இடத்தையும், நீர்நிலை குளத்தையும் மீட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செய்து தர கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆரணி தாலுகா மருசூர் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கியாஸ் உபயோகப்படுத்தி வருபவர்கள் காலி சிலிண்டரை கிராமத்தில் உள்ள ரோட்டு ஓரத்தில் பஸ் நிறுத்தம் அருகில் வைத்து விட்டு அருகில் வசிப்பவர்களிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு விவசாய வேலைக்கு செல்வது வழக்கம்.

பின்னர் பணம் கொடுத்து விட்டு கியாஸ் உள்ள சிலிண்டரை பெற்று சென்று வருவது நடைமுறையில் இருந்து வந்தது. நாடாளுமன்ற தேர்தலின் போது யாரோ வேண்டுமென்றே இலவசமாக வீடுகளுக்கு கியாஸ் கொடுப்பதாக பொய்யான தகவல் சொன்னதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரி தேர்தல் பறக்கும் படையிடம் தகவல் தெரிவித்து நேரில் வந்து பார்த்து உள்ளனர்.

நாங்கள் இல்லாத போது கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் காலி சிலிண்டர்கள் என 56 சிலிண்டர்களை கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி பறிமுதல் செய்து எடுத்து சென்று விட்டனர். பின்பு நேரில் சென்று தாலுகா வினியோக அதிகாரியிடம் கேட்டதற்கு விசாரித்து விட்டு தேர்தல் முடிந்ததும் உங்களிடம் திரும்பி கொடுத்து விடுகிறோம் என கூறினார்.

தேர்தல் முடிந்தவுடன் போய் கேட்டதற்கு உங்களை நேரில் வரச்சொல்லி கடிதம் வரும் என கூறினார். இன்று வரை எங்களுக்கு கடிதமோ அல்லது கியாஸ் சிலிண்டரோ கிடைக்கவில்லை. சமையல் செய்ய கியாஸ் சிலிண்டர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்களிடம் நேரில் விசாரணை செய்தும் அல்லது ஊரில் வந்து விசாரணை செய்தும் உண்மைகளை நேரில் கண்டறிந்து கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் காலி சிலிண்டர்களை திரும்ப பெற்று தருமாறு கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story