முக்காணியில் பா.ஜனதாவினர், விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயற்சி: பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை
பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, முக்காணியில் பா.ஜனதாவினர், விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
ஆறுமுகநேரி,
பாபநாசம் அணையில் 105 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பதால், அணையில் தண்ணீர் திறந்து, ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்காலில் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜனதா சார்பில், ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானாவில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அங்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் வீரமணி, மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதாவினர், விவசாயிகள் திரண்டு வந்து சாலை மறியலுக்கு முயன்றனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களிடம், ஏரல் தாசில்தார் அற்புதமணி, துணை தாசில்தார் சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவ ஆனந்த் (ஆத்தூர்), பத்திரகாளி என்ற பவுன் (ஆறுமுகநேரி) மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறையினரிடம் அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது பாபநாசம் அணையில் இருந்து வருகிற 21-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதாகவும், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்காலில் வருகிற 26-ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை வருகிற 26-ந்தேதி வரையிலும் ஒத்தி வைப்பதாக கூறிய பா.ஜனதாவினர், விவசாயிகள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story