கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
ஓசூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த 2 காட்டு யானைகள், கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள தைலத்தோப்பில் முகாமிட்டன. இந்த யானைகள் அவ்வப்போது அணையில் குளித்து விளையாடி வந்தன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 யானைகளும் அங்கிருந்து இடம் பெயர்ந்து பாகலூர் அருகே சென்றன. பின்னர் அங்கிருந்து சிங்கசாதனபள்ளி அருகில் தென்பெண்ணை ஆற்றின் பக்கமுள்ள தைலத்தோப்புக்கு சென்றன.
இந்த 2 யானைகளையும் பேரண்டபள்ளி வனப்பகுதி மற்றும் கர்நாடக வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டிய போதிலும் அவைகள் மீண்டும் பெலத்தூர், சிங்கசாதனபள்ளி ஆகிய பகுதிகளுக்கு திரும்பி வந்தன.
இந்தநிலையில், அந்த 2 யானைகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரோபார் என்ற யானையை கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதுமலை டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு, பேரண்டபள்ளி வனப்பகுதியில் உள்ள ஒரு நர்சரி தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தரணி என்ற மற்றொரு கும்கி யானையும் நேற்று முன்தினம் இரவு ஓசூர் வந்தது. அந்த யானையும், பேரண்டபள்ளியில் உள்ள நர்சரி தோட்டத்திலேயே கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகலூர் பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளும், நேற்று மீண்டும் கெலவரப்பள்ளி அணை பகுதிக்கே திரும்பி அங்குள்ள தைலத்தோப்பில் புகுந்துள்ளன.
அதில், ஆக்ரோஷமாக சுற்றும் குரோபார் யானையை, உடன் சுற்றி திரியும் மார்க் என்ற மற்றொரு யானையிடமிருந்து தனியாக பிரித்து, அதன்பின்னர் குரோபார் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை முதுமலை காட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கும்கி யானைகளின் உதவியுடன், இன்று (செவ்வாய்க்கிழமை) குரோபார் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, வாகனத்தில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணியில் ஈடுபட 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். குரோபார் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த பின்னர் மற்றொரு காட்டு யானையை கர்நாடகாவுக்கு விரட்டிட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story