தர்மபுரி, ஏரியூர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு.


தர்மபுரி, ஏரியூர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு.
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 7:52 PM GMT)

தர்மபுரி, ஏரியூரில் விநாயகர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஏரியூர்,

தர்மபுரியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் சாமி திருவீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவில், செல்வகணபதி கோவில், நெசவாளர் நகர் விநாயகர் கோவில், அன்னசாகரம் விநாயகர்-சிவசுப்பிரமணியசாமி கோவில் மற்றும் நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி சக்தி அக்குமாரியம்மன் கோவிலில் உள்ள சங்கடஹர விநாயகர் கோவிலில் நேற்று மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக யாகபூஜைகளும், சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story