கூடலூர் அருகே, பார்வுட் பஜார் சாலையில் விரிசல் அதிகரிக்கிறது - வீடுகள், கடைகள் இடியும் அபாயம்
கூடலூர் அருகே பார்வுட் பஜார் சாலையில் விரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள், கடைகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
கூடலூர்,
கூடலூர் அருகே ஓவேலி பகுதி கடந்த 1800-ம் ஆண்டில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கு வந்த ஆங்கிலேயர்கள் தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கினர். பார்வுட், நியூகோப், சீபோர், கிளன்வன்ஸ், லாரஸ்டன் என பல்வேறு பகுதிகள் உருவாகியது. நாளடைவில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பகுதியாக ஓவேலி திகழ்ந்தது. இவர்களை ஒருங்கிணைக்கும் மையமாக பார்வுட் பஜார் திகழ்ந்தது. இதுதவிர இப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வணிக மையமாக கூடலூர் பஜார் மாறியது. இதனால் ஓவேலி பகுதி மக்களை வைத்தே கூடலூர் நகரில் வணிகம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஓவேலி பகுதியில் வனங்களின் பரப்பளவு குறைவதை தடுக்க கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதித்து, சட்டப்பிரிவு-17ன் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள் கொண்டு வர வருவாய், வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஓவேலி பார்வுட் பஜாரில் கடைகள், வீடுகள் அதிகளவு உள்ளது. கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழையில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் பார்வுட் பஜார் வழியாக எல்லமலைக்கு செல்லும் சாலையின் நடுவில் விரிசல் ஏற்பட்டது. தற்போது மழையும் குறைந்து விட்டது. ஆனால் சாலையில் விரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் சாலையோரம் உள்ள கடைகள், வீடுகளின் சுவர்களும் விரிசல் உண்டாகி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு சில கடைகள் அந்தரத்தில் தொங்கியவாறு நிற்கிறது. இதனால் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடியாமலும், வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியாமல் வியாபாரிகள், பொதுமக்கள் வேறு இடங்களில் தங்கி வருகின்றனர். கனமழையால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பார்வுட் ஆற்றில் ராட்சத மரங்கள், பாறைகள் அடித்து வரப்பட்டு கிடக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் கூறியதாவது:-
கனமழையால் சாலையில் உண்டான விரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடைகள், வீடுகளுக்குள் முழுமையாக சேதம் அடைந்து விட்டது. இதனால் எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத வகையில் கட்டிடங்கள் மாறி விட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பட்டா நிலத்தில் கட்டி உள்ள கட்டிடங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட தொகை முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. மீண்டும் பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டிடங்கள் கட்ட முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
இதேபோன்று பந்தலூர் தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அப்போது கால்வாய்களிலும், நீரோடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அய்யன்கொல்லி பகுதியில் கடைகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர்.
இது தவிர மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் அவசர தேவைகளுக்கு தகவல்களை பரிமாறி கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். எனவே இதுபோன்ற சமயங்களில் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story