தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 8:08 PM GMT)

மழையூர் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைகேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அருகே தீத் தானிப்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 500-க்கு மேற்பட்டவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை தீத்தானிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவல்லி, ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story