விலையில்லா மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகள் மறியல்


விலையில்லா மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகள் மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 8:11 PM GMT)

விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

தரகம்பட்டி,

தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி குருணிகுளத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இதேபள்ளியில் கடந்த 2017-18-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினரிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்குள் உங்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என கூறியது.

இதனை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் மாணவ-மாணவிகள் நேற்று குருணிகுளத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பாளையம்-திருச்சி சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேவர்மலை கிராம நிர்வாக அலுவலர் முத்துச்சாமி, சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாரணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து முன்னாள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 30 நாட்களுக்குள் மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2017-18-ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் நேற்று பள்ளிக்கு வந்தனர். பின்னர் தங்களுக்கு அரசு மூலம் வழங்க வேண்டிய மடிக்கணினி தற்போது வரை வழங்கப்படவில்லை. ஆனால் இப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என கூறி, பள்ளியின் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார், பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது முன்னாள் மாணவிகள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி தலைமையாசிரியையிடம் கொடுத்தனர். இதையடுத்து தலைமையாசிரியை மனுவை கல்வி துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து முன்னாள் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story