போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குமரி பெண் மர்மச்சாவு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்


போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குமரி பெண் மர்மச்சாவு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:45 AM IST (Updated: 20 Aug 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குமரி பெண் மர்மச்சாவு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 ஆயிரத்து 920 கோடி ரூபாயில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வரும் வேளையில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாயை திருப்பி அனுப்பியது அவமானகரமானது. இது மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.

தமிழக அரசு பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை கூட்டி கொடுக்க நினைத்தால் அவர்களுக்கு மானியம் வழங்கலாம். எனவே பால் விலை உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

குமரி மாவட்டத்தை சேர்ந்த லீலாபாய் என்பவரை வள்ளியூர் மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆனால் போலீஸ் நிலையத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டார். அவரது உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து கொடுத்து உள்ளார்கள். விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணுக்கு எப்படி ரத்தவாந்தி வரும்? எனவே குமரி மாவட்ட பெண் மர்மமாக இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும், இழப்பீடும் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மரியாதை மிக்க நடிகராக ரஜினி திகழ்கிறார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது மோடியையும், அமித்ஷாவையும் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று ரஜினி கூறினார். மேலும் மோடியும், அமித்ஷாவும் அர்ச்சுனன், கிருஷ்ணன் போன்றவர்கள் என்றும் பாராட்டினார். ஆனால் ரஜினி இனி தான் மோடியையும், அமித்ஷாவையும் புரிந்து கொள்ளப்போகிறார்.

தவறான கொள்கை

மத்திய அரசின் தவறான கொள்கையால் தொழில் வளர்ச்சி குறைந்து உள்ளது. விவசாயம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவை நெருக்கடியை சந்தித்துள்ளன. 45 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு வேலைவாய்ப்பு குறைந்து இருக்கிறது. இதை திசை திருப்புவதற்காக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.

புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களின் கல்வி கேள்வி குறியாகிவிடும். எனவே புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். பா.ஜனதா திட்டங்களை ப.சிதம்பரம் வரவேற்று பேசியதாக கூறுகிறீர்கள். இதுதொடர்பாக நான் முழுவதுமாக அறியவில்லை. எனவே இதுபற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை. சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து கொண்டு அமித்ஷா கர்நாடகாவில் ஆட்சி கலைப்பு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story