கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 20 Aug 2019 6:27 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்–தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில், டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆஸ்பத்திரி வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். டி.என்.எம்.ஒ.ஏ. சங்கத்தின் மாவட்ட தலைவர் சுதர்சன், டி.டி.என்.ஜி.டி.ஏ. சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் கைகளை கோர்த்து கொண்டு வரிசையாக நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அப்போது, டாக்டர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள தொகை உயர்த்தப்படாமலே இருந்து வருகிறது. பணபற்றாக்குறை இருந்து வருவதாக அரசு கூறி வருகிறது. மத்திய அரசு ஊதியத்திற்கு ஏற்ப அரசு டாக்டர்களுக்கும் சம்பள தொகையை உயர்த்த நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, தகுதிக்கு ஏற்ப ஊதியத்தை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story