ஆபத்தான அடர்ந்த வனப்பகுதி வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள்


ஆபத்தான அடர்ந்த வனப்பகுதி வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:45 AM IST (Updated: 20 Aug 2019 8:34 PM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான அடர்ந்த வனப்பகுதி வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்கிறார்கள்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை ஊராட்சிக்கு உட்பட்டது தடசலட்டி இட்டரை மலைகிராமம். இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெஜலட்டி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். தடசலட்டி இட்டரை கிராமத்தில் இருந்து பெஜலட்டி வரை மண்பாதை மட்டுமே உள்ளது.

தினமும் காலை, மாலை என இருமுறை தடசலட்டி இட்டரை கிராமத்திக்கு 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பெஜலட்டியில் படிக்க செல்லும் மாணவ-மாணவிகள் இந்த பஸ்சில்தான் செல்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தடசலட்டி இட்டரை கிராமத்தில் சாரல் மழை பெய்துவருகிறது. இதுபோன்ற மழை காலங்களில் மண்பாதையில் பஸ் சென்றால், சகதியில் சக்கரங்கள் சிக்கிக்கொள்ளும். அதனால் 2 முறை மட்டுமே வரும் பஸ்சும் ஒரு வாரமாக இயக்கப்படவில்லை.

இதனால் தடசலட்டி இட்டரை மலைகிராம மாணவ-மாணவிகள் காலை மற்றும் மாலையில் வனவிலங்குகள் நடமாடும் ஆபத்தான அடர்ந்த வனப்பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து பெஜலட்டி பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகிறார்கள். பொதுமக்களும் இந்த பாதையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடசலட்டி இட்டரை கிராமத்தில் இருந்து பெஜலட்டி வரை தார்சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Next Story