கூட்டுறவு வங்கி தேர்தல்: வாக்காளர் பட்டியலில் கருணாநிதி பெயர் இடம்பெற்று இருந்ததால் பரபரப்பு


கூட்டுறவு வங்கி தேர்தல்: வாக்காளர் பட்டியலில் கருணாநிதி பெயர் இடம்பெற்று இருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 5:09 PM GMT)

திருவாரூரில் கூட்டுறவு வங்கி தேர்தல் வாக்காளர் பட்டியலில் கருணாநிதியின் பெயர் இடம் பெற்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் வடக்கு வீதியில் கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி உள்ளது. பழமையான இந்த வங்கியில் தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதி உறுப்பினராக இருந்து வந்தார். மொத்தம் 14 ஆயிரத்து 817 உறுப்பினர்களை கொண்ட இந்த வங்கிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு 11 நிர்வாகக்குழு இயக்குனர்களுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. என 2 அணிகளாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் நிர்வாகக்குழுவின் முன்னாள் தலைவரும், கட்சியின் நகர செயலாளருமான ஆர்.டி.மூர்த்தி தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. சார்பில் திருவாரூர் நகரசபை முன்னாள் துணைத்தலைவர் செந்தில் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.

வாக்குப்பதிவு

11 நிர்வாகக்குழு இயக்குனர்களுக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 8 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதி, அவருடைய நண்பர் மறைந்த தென்னன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த 2 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் வாக்களிக்க வந்த உறுப்பினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருத்தம் செய்யவில்லை

சங்கத்தில் பல ஆண்டுகளாக நிர்வாகக்குழு இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருவதால் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இந்த முறை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் திருத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இனி வரும் காலங்களில் வாக்காளர் பட்டியலை உரிய முறையில் திருத்தம் செய்து வெளியிட்டு, அதன் பின்னரே வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 5 மணி அளவில் வாக்களிப்பதற்காக ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குவாதம்

கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒருவர் வாக்களிப்பது தொடர்பாக இரு அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உடனடியாக போலீசார் சமாதானம் செய்தனர். இன்று(புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Next Story