காவிரி நீர் திருவையாறு வந்தது ஆரத்தி எடுத்து வழிபாடு


காவிரி நீர் திருவையாறு வந்தது ஆரத்தி எடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 7:01 PM GMT)

காவிரி நீர் திருவையாறு வந்தது. இதையடுத்து காவிரி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடந்தது.

திருவையாறு,

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் குறுவை, சம்பா, தாளடி என 3 போக நெல் சாகுபடியையும் டெல்டா விவசாயிகளால் முழுமையாக செய்ய முடியும். ஆனால் தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுடி பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படவில்லை.

கர்நாடகாவில் பலத்த மழை

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு, மேட்டூர் அணையை வந்தடைந்தது. கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம், புதுஆறு உள்ளிட்ட ஆறுகளில் 17-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மிகவும் குறைவான அளவே தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஆரத்தி எடுத்து வழிபாடு

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையுமா? என்பது சந்தேகம் தான் என விவசாயிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று திருவையாறை வந்தடைந்தது.

இதையொட்டி திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது காவிரிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடந்தது. காவிரியில் தண்ணீர் வந்ததால் திருவையாறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story