திருச்சியில் ‘மரச்செக்கு ஆயில்’ என்ற பெயரில் கலப்பட எண்ணெய் தயாரித்த தனியார் ஆலைக்கு ‘சீல்’ வைப்பு


திருச்சியில் ‘மரச்செக்கு ஆயில்’ என்ற பெயரில் கலப்பட எண்ணெய் தயாரித்த தனியார் ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 11:15 PM GMT (Updated: 20 Aug 2019 7:25 PM GMT)

‘மரச்செக்கு ஆயில்’ என்ற பெயரில் திருச்சியில் கலப்பட எண்ணெய் தயாரித்த தனியார் ஆலையை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆலையை சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சி,

உடல் ஆரோக்கியத்திற்காக தற்போது டாக்டர்கள் உணவில் பெரும்பாலும் மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்தவே பரிந்துரை செய்கிறார்கள். வழக்கமான எண்ணெயைவிட மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம் ஆகும். பொதுமக்களில் பலரும் தற்போது மரச்செக்கு எண்ணெயைத்தான் விரும்பி வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

அதை பயன்படுத்தி தமிழகத்தில் புற்றீசல்போல ஆங்காங்கே மரச்செக்கு ஒரிஜனல் ஆயில் இங்கு கிடைக்கும் என சிறிய அளவிலான விளம்பர போர்டை வைத்துக்கொண்டு சிறிய கடைகளில் அவற்றை விற்க தொடங்கி விட்டனர். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு சிலர் சில்லரையாக டின்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள்.

கலப்பட எண்ணெய்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பட்டி ரோட்டில் ‘காளை மார்க்’ என்ற பெயரில் தனியார் மரச்செக்கு ஆயில் விற்பனை செய்யும் ஆலை உள்ளது. இதன் ஷோரூம் ஆர்.பி.எப். ரோடு, காஜாமலை, திருச்சி என்ற முகவரியில் செயல்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக எடமலைப்பட்டி புதூர் பட்டி ரோட்டில் இந்த ஆலை இயங்கி வந்ததையடுத்து, அங்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மரச்செக்கு எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலமாக அங்கு எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்த பொதுமக்களுக்கு, அதில் கலப்படம் கலந்திருப் பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த எண்ணெய் பாமாயில் போன்று இருந்துள்ளது. மேலும் அதனை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் உபாதை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இதுகுறித்து அப்பகுதி 40-வது வார்டு முன்னாள் தி.மு.க. கவுன்சிலரும் வட்ட செயலாளருமான முத்து செல்வத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு அவரது தலைமையில் பட்டி ரோட்டில் உள்ள ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர், அங்கு டின்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கலப்பட எண்ணெய்களை பார்வையிட்டு கோஷம் எழுப்பினார்கள். கலப்பட எண்ணெய் குறித்து உரிய ஆய்வு நடத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. குருடாயில், தவிட்டு ஆயில், பாமாயில் உள்ளிட்டவைகளை கலப்படம் செய்து மரச்செக்கு எண்ணெய் என்ற பெயரில் போலியாக விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அப்போது அங்கு, ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். உரிமையாளர் இல்லை.

இந்த போராட்டம் குறித்த தகவல், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு, பட்டி ரோட்டில் உள்ள மரச்செக்கு ஆயில் ஆலைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, அலுவலர்கள் மாரியப்பன், முத்துராஜ், செல்வம், ராமசாமி ஆகியோர் வந்தனர். மேலும் எடமலைப்பட்டி புதூர் போலீசாரும் பாதுகாப்புக்காக வந்தனர்.

பூட்டி ‘சீல்’ வைப்பு

அங்கு அதிகாரிகள், மரச்செக்கு எந்திரம், டின்கள், பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் முதலியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால், ஆலை உரிமையாளர் இல்லை என்பதால் அங்குள்ள எண்ணையை பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல், ஆலையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அப்போது உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா கூறுகையில், ‘மரச்செக்கு எண்ணெயில் கலப்படம் இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் தரப்பில் நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் உத்தரவின்பேரில்தான் நாங்கள் ஆலையை ஆய்வு செய்து ‘சீல்’ வைத்துள்ளோம். மேல் நடவடிக்கை குறித்து கலெக்டரின் அறிவுரையின் பேரில் எடுக்கப்படும். பாமாயில் மட்டும் 1000 லிட்டருக்கு மேல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பாமாயில் விற்பதற்கான உரிமம் பெறப்படவில்லை. ஆலை உரிமையாளர் இல்லாத காரணத்தால் பரிசோதனைக்கு எண்ணெய் எடுக்கப்படவில்லை. கலப்பட எண்ணெய் உட்கொள்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கொழுப்பு அதிகரிக்கும். இருதயத்தில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கலப்பட எண்ணெய் மற்றும் சரியில்லாத உணவை சாப்பிடுவதால்தான் நிறைய வியாதிகள் வருகிறது. இந்த நிறுவனத்திற்கு திருச்சியில் மேலும் ஒரு ஷோரூம் மற்றும் சென்னையிலும் விற்பனை நிலையம் உள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக அனைத்து மரச்செக்கு ஆயில் ஆலைகளிலும் சோதனை நடத்தப்படும்’ என்றார்.

Next Story