முல்லைப்பெரியாறு அணை ஆக்கிரமிப்பை மத்திய அரசின் ரகசிய அறிக்கை உறுதி செய்துள்ளது - மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் தகவல்


முல்லைப்பெரியாறு அணை ஆக்கிரமிப்பை மத்திய அரசின் ரகசிய அறிக்கை உறுதி செய்துள்ளது - மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பது மத்திய அரசின் ரகசிய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் தனது வாதத்தின் போது தெரிவித்தார்.

மதுரை,

தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத்தலைவர் விஜயகுமார் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்கு மத்திய காவல் படையை நியமனம் செய்யவும், அணையில் 132 முதல் 152 அடி வரை நீர்த்தேங்கி நிற்கும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, “முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் விஜயகுமார் இறந்துவிட்டார். எனவே பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரெங்கன் என்பவரை மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, இதேபோன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “அது கேரள ஆக்கிரமிப்பு தொடர்பானது. இந்த வழக்கு தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட 152 அடி வரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரும் வழக்கு. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பது மத்திய அரசின் ரகசிய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.

இதையடுத்து இதுகுறித்து கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Next Story