நிலஆக்கிரமிப்பு வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு


நிலஆக்கிரமிப்பு வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகிக்கு ரூ.1 லட்சம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

நில ஆக்கிரமிப்பு வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை புதுதாமரைப்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை அருகே மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறேன். எனக்கு நடைபாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்து பள்ளி நில விவகாரத்தில் தலையிடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நில ஆக்கிரமிப்பு செய்து இருப்பதால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கவும், மனுதாரர் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து பாண்டியராஜன், நில ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றுவது குறித்து மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த 17-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாண்டியராஜன் மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை மறைத்து தற்போது புதிதாக இந்த மனு தாக்கல் செய்துள்ளார்” என தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், இந்த தொகையை மதுரை ஐகோர்ட்டு இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் 2 வாரத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story