கோத்தகிரி அருகே, தேயிலை தோட்டத்தில் உலா வந்த சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி
கோத்தகிரி அருகே அளக்கரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி உலா வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி, காட்டு யானை, புலி, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், தேயிலை தோட்டங்களில் உலா வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்படுவதும், அதனால் அவ்வப்போது மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
கடந்த மாதம் ராப்ராய் பகுதியிலிருந்து பேட்லாடா கிராமத்திற்கு செல்லும் சாலையில், தேயிலை தோட்டத்தில் உள்ள பாறைகளில் 2 சிறுத்தைப்புலிகள் பகல் நேரத்திலேயே வெயிலில் படுத்து ஓய்வெடுத்தது. இதைக்கண்ட தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சத்தில் அங்கிருந்து வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் அளக்கரை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று உலா வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் சிறுத்தைப்புலியை கேமராவில் படம் பிடித்தார். மேலும் இதுகுறித்து தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும் கூறினார்.
சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
அளக்கரை பகுதியில் காட்டெருமை, சிறுத்தைப்புலி மற்றும் கரடிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர்.
எனவே வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வனவிலங்குகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேயிலை தோட்டத்தில் தொடர்ந்து நடமாடி வரும் சிறுத்தைப்புலிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story