உலிக்கல் பேரூராட்சியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 விடுதிகளுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை


உலிக்கல் பேரூராட்சியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 விடுதிகளுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2019 10:15 PM GMT (Updated: 20 Aug 2019 7:47 PM GMT)

உலிக்கல் பேரூராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 தனியார் விடுதிகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

குன்னூர்,

மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இங்கு விடுதிகளில் தங்கி இயற்கை காட்சிகளை ரசித்து செல்லுவது வழக்கம். இதற்காக மாவட்டங்களில் ஏராளமான தனியார் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

நகரப் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மட்டுமின்றி இயற்கை காட்சிகள் அமைந்துள்ள மலைபாங்கான இடங்களில் தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. சிலர் தேயிலை தோட்டங்களை அழித்து அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நடவடிக்கையின் பேரில் அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாக புகார் இருந்தது. இதன் பேரில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தலைமை எழுத்தர் ஜெகதிஷ், கொலக்கொம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சுமித்ரா ஆகியோர் பேரூராட்சிக்குட்பட்ட சேலாஸ், கிளிஞ்சடா, பாரதி நகர், ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் மேற்கண்ட பகுதிகளில் அனுமதியின்றி 5 தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக 5 தனியார் விடுதிகளையும் பூட்டி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

Next Story