அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை


அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை
x
தினத்தந்தி 21 Aug 2019 5:45 AM IST (Updated: 21 Aug 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் அருகே அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கிடந்த இடத்தை போலீஸ் மோப்ப நாய் அடையாளம் காட்டியது.

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி-மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள நாடக மேடை பகுதியில் நேற்று முன்தினம் ரத்தக்கறை படிந்து காணப்பட்டது.

இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது ரத்தம் படிந்து இருந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடியது.

போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். அந்த மோப்பநாய், கிராம மந்தைத்திடலில் இருந்து ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு ஓடியது. அங்குள்ள கிணறு அருகே போய் நின்றது.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அங்கு முகம் சிதைந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் 15பி-மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருடைய மகன் பெரியணன் (வயது 32) என தெரியவந்தது. பெரியணன் மதுரை பசுமலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி தானியலட்சுமி (24).

நாடக மேடை பகுதியில் பெரியணனை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு, பின்னர் அங்கிருந்து பிணத்தை தூக்கி வந்து, வயல்வெளி அருகே உள்ள கிணற்று பகுதியில் மர்ம கும்பல் வீசிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பெரியணன் உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story