மாவட்ட விவசாயிகளிடம் 550 டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு: கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 550 டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
நாமக்கல்,
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் இலக்கீடாக 550 டன் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது பாசிப்பயறு விலை 1 கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.63 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பாசிப்பயறு விலை ரூ.70.50 என கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நாமக்கல் அடுத்த புதன்சந்தையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இத்திட்டம் செயல்பட உள்ளது. இதன் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிய பாசிப்பயறு கொள்முதல் அக்டோபர் மாதம் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பாசிப்பயறு விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story