சூளகிரி பகுதியில் ஏரிகள் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல்
சூளகிரி பகுதியில் ஏரி, குட்டை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி ஊராட்சியில் உள்ள செம்மராகுலு ஏரி மற்றும் தேக்கலபள்ளி ஊராட்சியில் குட்டை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் மணிவண்ணன், சுரேஷ், செய்தி,மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், செம்மராகுலு ஏரி, சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில், ரூ.5 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேக்கலபள்ளி ஊராட்சியில் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட குட்டை, ரூ.1 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கரைகள் 4 மீட்டர் அகலம், உயரம் 6 மீட்டர் என்ற அளவிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முழு வீச்சி்ல் தொடங்கப்பட்டு ஏரி, கரைகள் உயர்த்தியும், தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அதிகளவில் மழை நீரை சேகரிக்கவும், குளம், குட்டைகள் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் தற்போது 100 ஏரிகள் மற்றும் 425 குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார். மேலும் இந்த பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story