பேரணாம்பட்டு அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு அருகே ஏரிகுத்தி கிராமத்தில் ஒரு பிரிவினர் சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டிற்கு அருகில் சந்திரன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான 4½ ஏக்கர் நிலம் மற்றும் மாந்தோப்பு உள்ளது. இப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சந்திரன் நிலத்திற்கு மழைநீர் வராமல் இருக்க சுடுகாட்டு இடத்தை இரவோடு, இரவாக ஆக்கிரமித்து சுமார் 3 அடி உயரத்திற்கு மண் தரையை அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மண் தரை அமைக்கும்போது சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்த பிணங்கள், மண்டை ஓடுகள் வெளியில் வந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மண் கரையை இடித்து அகற்றினர். அப்போது அங்கு வந்த சந்திரனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த பேரணாம்பட்டு வருவாய் ஆய்வாளர் ரகுராமன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் வடிவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று (புதன்கிழமை) நிலத்தை அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story