மாவட்டத்தில் பலத்த மழை: பெத்தநாயக்கன்பாளையத்தில் 115.6 மி.மீ. பதிவு


மாவட்டத்தில் பலத்த மழை: பெத்தநாயக்கன்பாளையத்தில் 115.6 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 21 Aug 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பெத்த நாயக்கன்பாளையத்தில் 115.6 மி.மீ. மழை பதிவானது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மழை பெய்கிறது. இதே போல நேற்று முன்தினம் இரவும் கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. மேலும் விடிய, விடிய மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பலத்த மழையால் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக விளையாட்டு பயிற்சி பெற வந்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாமல் சிரமம் அடைந்தனர். நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களும் தண்ணீர் தேங்கி நின்றதால் திரும்பி சென்றனர்.

இந்த மழையால் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதேபோல் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 301.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதன் சராசரி அளவு 20.1 மி.மீ. ஆகும். இதில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 115.6 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

வாழப்பாடி-80.5, ஆத்தூர்-38.6, சேலம்-21.8, ஆணைமடுவு-14, காடையாம்பட்டி-11, ஏற்காடு-10.4, கரியகோவில்-5, தம்மம்பட்டி-3.2, ஓமலூர்-1.4, மேட்டூர்-0.2.

Next Story