தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற போது, அரசு பஸ் மோதி பள்ளி மாணவி பலி


தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற போது, அரசு பஸ் மோதி பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 8:37 PM GMT)

தாயுடன் ஸ்கூட்டியில் சென்ற போது அரசு பஸ் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் கமலாமில் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி பிரியா. இவர்களது மகள் பிரவீனா (வயது 11). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். பிரியா தனது மகளுடன் ஸ்கூட்டியில் சிங்காநல்லூர் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் மதுரையில் இருந்து வந்த அரசு பஸ் சிக்னல் அருகே திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டி மீது அரசு பஸ் மோதியது. இதனால் நிலை தடுமாறிய பிரியாவும், பிரவீனாவும் ஆளுக்கொரு பக்கமாக கீழே விழுந்தனர். இதில் கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சின் பின்சக்கரம் பிரவீனா மீது ஏறியது. இதனால் படுகாயம் அடைந்த பிரவீனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரவீனா பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது:-

சிங்காநல்லூர் சிக்னல் அருகில் தான் போலீஸ்நிலையம் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட வேண்டும் என்றனர்.

Next Story