குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்


குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 8:58 PM GMT)

குலசேகரம் அருகே பெருஞ்சாணி அணைப்பகுதியில் குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குலசேகரம்,

குலசேகரத்தை அடுத்த பெருஞ்சாணி அணை அருகே புத்தன்அணை கிணற்றில் இருந்து நாகர்கோவிலுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்படுகிறது. இவ்வாறு தோண்டப்படும் குழிகளால் சாலை பழுதடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

குறிப்பாக பெருஞ்சாணி, புத்தன்அணை, கமுகன்விளை, குற்றியாணி, வில்லுசாரி மலை, மணலோடை போன்ற பகுதிகளில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து கடந்த 6 மாதங்களாக பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பால் வெட்டும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

சாலை மறியல்

இதனை கண்டித்து நேற்று காலை 10 மணியளவில் பொன்மனை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்ப லீலா ஆல்பன், ஒன்றிய தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், ஜெகநாதன், ஜாண் பிரைட் மற்றும் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஜெகன் செல்வராஜ், உதவி பொறியாளர் தினேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 2½ மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story