சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்
சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேட்டை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் உள்ளன. தற்போது இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு கோழிபாண்டியனும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவரும் சாப்பிடுவதற்காக அண்ணாமலைநகரில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அங்கு இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் இருவரும் கைகளில் ஒரு பொருளை வைத்து மறைத்தபடி, ஓட்டலுக்குள் நுழைந்தனர். அப்போது திடீரென இருவரும் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை கோழிபாண்டியன் மீது வீசினர். இதில் கோழிபாண்டியனின் மீது நாட்டு வெடிகுண்டுகள் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். கோழிபாண்டியன் இறந்ததை உறுதி செய்த பின்னர் 2 வாலிபர்களும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவுடி கோழிபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி கோழிபாண்டியனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையான கோழிபாண்டியனுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், அஸ்வின்(8) என்ற மகனும், அஸ்மிதா(5) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story