அமாவாசை விழாவை முன்னிட்டு, மேல்மலையனூர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
அமாவாசை விழாவை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆவணி மாத அமாவாசை விழா நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள், கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும். கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியல் அறை ஏற்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கவும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கோவிலின் பாதுகாப்பு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்சுகள், கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story