வானவில் : கழுத்து வலியைப் போக்கும் மசாஜர்


வானவில் : கழுத்து வலியைப் போக்கும் மசாஜர்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:08 PM IST (Updated: 21 Aug 2019 4:08 PM IST)
t-max-icont-min-icon

இப்போது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய பிரச்சினையே கழுத்து வலிதான். நாளில் பெரும்பகுதி கம்ப்யூட்டரின் முன்பாக பணிபுரிவதன் வெளிப்பாடாக பலரும் கழுத்து வலி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

பல சமயங்களில் கழுத்து வலிக்கு நிவாரணிகளை தடவுவது தற்காலிக தீர்வாக அமைகிறது. வலி தீவிரமாகும்போது மாத்திரைகளை நம்ப வேண்டியிருக்கிறது. இளம் வயதிலேயே பலரும் காலர் (கழுத்துப் பட்டை) அணிய வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஜியோமி நிறுவனம் மசாஜரை அறிமுகம் செய்துள்ளது.‘ஜீபேக் நெக் மசாஜர் ஜி2’ என்ற பெயரில் இது வந்துள்ளது. இதன் விலை 35 டாலராகும் (சுமார் ரூ. 2,500). ஒரே இடத்தில் நீண்ட நேரம் பணியாற்றுவதால், அதிலும் கம்ப்யூட்டரை பார்த்தபடி பணி புரிவதால் கழுத்துப் பகுதி தசைகள் இறுகிவிடுகின்றன. இதுவே கழுத்து வலிக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

கழுத்தில் அணியும் ஸ்கார்ப்பை போலவே (எல் வடிவில்) இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எடை (190 கிராம்) குறைவானது. இதனால் கழுத்தில் இருப்பது சுமையாக இருக்காது. இது பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதால் இதை அணிந்திருப்பது ஒரு பிரச்சினையாகவோ, வேறுமாதிரியான தோற்றத்தையோ தராது. இதில் 3 மசாஜ் முனைகள் உள்ளன. இதன் ஒவ்வொரு முனையும் கழுத்தின் தசைப் பகுதியில் லேசான அதிர்வை ஏற்படுத்தி தசைப் பகுதியின் இறுக்கத்தைப் போக்க உதவுகிறது.

தசைப் பகுதியை பிடித்து விடுதல், அக்கு பிரஷர் புள்ளிகளை தூண்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்யும். இதில் ஆட்டோமேடிக் சர்குலேஷன் மோட் வசதியும் உள்ளது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தையும் அளித்து இறுகிய தசைப் பகுதியில் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் கழுத்து வலி குறையும். குளிர்காலத்தில் இதைப் பயன்படுத்தினால் சிறந்த பலன் தெரியும். இது விரைவாக சார்ஜ் ஆகும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்து, தினசரி அரை மணி நேரம் பயன்படுத்தினால் 8 நாள்கள் வரை செயல்படும். மனிதனின் தோல் பகுதியில் இதன் மையப் புள்ளிகள் படாமலிருந்தால் 60 வினாடிகளுக்குப் பிறகு தானாகவே இது ஆப் ஆகிவிடும். இதை ரிமோட் கண்ட்ரோல் மூலமும் செயல்படுத்தலாம். அதை ஸ்மார்ட்போன் மூலமும் இயக்கலாம். எந்தவித பக்க விளைவும் இல்லாமல் சுலபமான தீர்வாக அமையும் இந்த மசாஜர் கருவியை விரைவிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜியோமி திட்டமிட்டுள்ளது.

Next Story