வானவில் : இந்திய சாலைகளை கலக்க வருகிறது ‘டிரைபர்’
பிரான்சைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது டிரைபர் என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை அறிமுகப்படுத்துகிறது. இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இம்மாதம் 28-ந் தேதி அறிமுகம் செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
4 மீட்டருக்கும் குறைவான பிரிவில் வந்துள்ள எஸ்.யு.வி. மாடல் இதுவாகும். இதன் நீளம் 3,990 மி.மீ., அகலம் 1,637 மி.மீ, உயரம் 2,656 மி.மீ. ஆகும். இதன் சக்கரங்களின் ஆரம் 182 மி.மீ. ஆகும். இந்த மாடலில் 84 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் இட வசதியும் உள்ளது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்குவதன் மூலம் பொருட்கள் வைக்கும் இட வசதி 625 லிட்டராக அதிகரிக்கும்.
புரெஜெக்டர் முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு, ரூப் பார், 15 அங்குல அலாய் சக்கரங்கள், கழுகின் அலகு போன்ற பின்புற விளக்கு, ஸ்கிட் பிளேட் ஆகிய அம்சங்களுடன் கம்பீரமான தோற்றத்தில் இது அறிமுகமாகிறது. உள்பகுதியில் 8 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ என பல்வேறு வசதிகள் உள்ளன. இரண்டாவது வரிசையில் உள்ளவர்களுக்கென ஏ.சி. வசதி, மூன்றாவது வரிசையில் உள்ளவர்களுக்காக மேற்கூரையில் ஏ.சி. வசதி என குளிர்ச்சியான பயண அனுபவத்தை தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. பொத்தான் மூலம் ஆன்-ஆப் வசதி, பாதுகாப்புக்கு 4 ஏர் பேக்குகள் என மிகச் சிறப்பாக, கன கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 72 பி.எஸ். திறனை 6,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 5 ஸ்பீடு மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட மாடலும் அறிமுகமாகிறது. டிரைபர் அறிமுகம் மூலம் தனது விற்பனை சந்தையை இரட்டிப்பாக உயர்த்திக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story