அவினாசியில் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


அவினாசியில் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் விவசாய மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அவினாசி மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பாப்பாங்குளம், புஞ்சை தாமரை குளம்,பாலியக்காடு, வாகராயம்பாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் தோட்டத்தில் உள்ள விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துவதற்காக நேற்று முன்தினம் அவினாசி மின்வாரிய அலுவலர்கள் சென்றுள்ளனர். அப்போது விவசாயிகள் மின்வாரிய அலுவலர்களை தடுத்து இங்கு மீட்டர் பொருத்தக் கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மின் வாரிய அலுவலர்கள் மீட்டர் பொருத்தாமல் திரும்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று ஆதராம்பாளையம், புஞ்சை, தாமரை குளம், பாப்பான்குளம், பாலியக்காடு, உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து அவினாசி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் மின்வாரிய செயற்பொறியாளர் பாலனிடம் எங்களது மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்த கூடாது என்று கூறி கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

அவினாசி தாலுகா சேவூர் உள்வட்டம் கிராமப்பகுதிகளில் உள்ள விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்துவதற்காக மின்வாரிய ஊழியர்கள் வந்தார்கள். அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்த சொல்லி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் எதற்காக மின் மீட்டார் பொருத்துகிறார்கள் எங்கள் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தாமல் எங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

 இதுகுறித்து செயற்பொறியாளர் பாலன் கூறுகையில் ‘‘ விவசாயிகளுக்கு எவ்வளவு மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் இந்த மீட்டர் பொருத்துமாறு அரசு அறிவித்துள்ளது அதற்கான பணிகள் தான் மேற்கொள்ளப்பட்டது ’’ என்று கூறினார்.

Next Story