மயிலாடுதுறையில், பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் புதிய மதுக்கடை திறப்பு


மயிலாடுதுறையில், பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் புதிய மதுக்கடை திறப்பு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 21 Aug 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் பஸ் நிறுத்தம் அருகே புதிய மதுக்கடை போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை பகுதியில் முன்பு 18 மதுக்கடைகள் இருந்தன. கோர்ட்டு உத்தரவின்படி நெடுஞ்சாலையோரம் இருந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பாரத ஸ்டேட் வங்கி செல்லும் சாலையில் 2 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கு அந்த பகுதியில் உள்ள வணிகர்கள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கூறைநாடு பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு வந்த போலீசார் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழலகத்தில் பயணிகள் அமரும் இடத்தில் உட்கார்ந்து இருந்தனர். இதனால் பஸ்சுக்காக காத்து நின்ற பயணிகள் அவதிப்பட்டனர். மேலும், போலீசாரை ஏற்றி வந்த வேனும் பஸ் நிறுத்தத்திலேயே நிறுத்தப்பட்டதால், நிறுத்தத்தில் நிற்க வேண்டிய பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் அங்குள்ள பயணிகள் நிழலகம் மதுகுடிப்போரின் கூடாரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story