கூடுதல் வீரியத்துடன் அனைத்து தரப்பினரையும் தாக்கிவரும் தொண்டை அடைப்பான் நோய்; தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுரை


கூடுதல் வீரியத்துடன் அனைத்து தரப்பினரையும் தாக்கிவரும் தொண்டை அடைப்பான் நோய்; தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுரை
x
தினத்தந்தி 22 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வீரியத்துடன் மீண்டும் அனைத்து தரப்பினரையும் தாக்கிவரும் தொண்டை அடைப்பான் நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுரை கூறியுள்ளது.

ராமநாதபுரம்,

கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு காரின் பாக்டீரியம் டிப்தீரியா என்ற வைரஸ் கிருமியால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி பலரையும் உயிர் பலி வாங்கிய தொண்டை அடைப்பான் நோய் உரிய தடுப்பு மருந்துகள் மூலம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் உருவெடுத்து சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு தொண்டையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு அவதி அடைவார்கள்.

இந்த தொண்டை அடைப்பான் நோய் சமீபகாலமாக வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் கூறியதாவது:- தொண்டை அடைப்பான் நோய் முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உருவாகி வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் தொண்டை அடைப்பான் நோய் 25 வயது வரையிலான நபர்களை தாக்கி வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கடுமையான தொண்டை வலி ஏற்படும். டான்சிஸ் வீக்கம் ஏற்பட்டு அவதி அடையச்செய்யும். தொண்டையில் சிறிய ஜவ்வு போன்ற படலம் உருவாகி அது நாளடைவில் பெரிதாகி தொண்டையை அடைத்து எதுவும் சாப்பிட முடியாத நிலை ஏற்படும். இதற்கு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அரசு அறிவித்துள்ள அட்டவணைப்படி முறையாக அந்தந்த பருவத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் தொண்டை அடைப்பானுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சிலர் தடுப்பூசி போடாததால்தான் இந்த நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதுதவிர ஏற்கனவே இந்த காரின் பாக்டீரியம் வைரஸ் கிருமி முறையான தடுப்பூசியால் அழிக்கப்பட்டுவிட்டதால் தற்போது அந்த கிருமி மேலும் அதிக வீரியம் கொண்டு வேகமாக பரவி வருகிறது. இதனாலேயே 25 வயது வரையிலான அனைத்து தரப்பினரையும் தாக்குகிறது. இதற்கு டெட்டனஸ் டிப்தீரியா தடுப்பூசி மருந்தினை போட்டுக்கொண்டாலே போதுமானது.

புதிய வீரியமிக்க காரின் பாக்டீரியம் கிருமி நம்மை அண்டாமல் காத்துக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை இந்த நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த மாவட்டத்தினர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் சென்றுவருவதால் அவர்கள் மூலம் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம். எனவே அனைவரும் முன்னெச்சரிக்கையாக இந்த தடுப்பூசியினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story