வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய வழக்கில் 3 பேருக்கு வலைவீச்சு


வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய வழக்கில் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:45 AM IST (Updated: 21 Aug 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே செல்வராசு எம்.பி. மீது கத்தி வீசிய வழக்கில் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேதாரண்யம்,

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த செல்வராசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த யாரோ மர்ம நபர்கள் செல்வராசு எம்.பி. மீது கத்தியை வீசினர். ஆனால் அந்த கத்தி அவர் மீது படாமல் ஜீப்பின் முன்பக்கத்தில் பட்டு கீழே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக செல்வராசு எம்.பிக்கோ, வேறு யாருக்குமோ காயம் ஏற்படவில்லை.

3 பேருக்கு வலைவீச்சு

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், அகஸ்தியன் பள்ளி பகுதியை சேர்ந்த லெட்சுமணன், வேதமணி, லோகு ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் செல்வராசு எம்.பி. மீது கத்தியை வீசியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக போலீசார், தலைமறைவான 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story