டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விஞ்ஞான உலகத்தில் பெண் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விஞ்ஞான உலகத்தில் பெண் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 22 Aug 2019 5:00 AM IST (Updated: 21 Aug 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகள் மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோடு,

ஈரோட்டில் வேளாளர் கல்வி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பொன் விழா மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உயர்கல்வியின் மூலம் மிகவும் துடிப்பான, அறிவார்ந்த சமுதாயத்தினை உருவாக்குவதும், சமமான, தரமான உயர்வாக்கம், சிறப்பான, உலகளாவிய போட்டித் திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை தனிச்சிறந்த சக்தியாக உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கமாகும். உயர்கல்வி மூலம் தற்போதுள்ள மனித வளத்தினை மேம்படுத்தி, திறன் வாய்ந்த தொழில்களை போதுமான எண்ணிக்கையில் உருவாக்கி, தமிழ்நாட்டை உலகளாவிய ஒரு மையமாக மேம்படுத்திட, மாற்றிட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக பொறுப்பேற்கின்றபொழுது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம், தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அகில இந்திய அளவில், உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 25.8 சதவீதம். ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48.6 சதவீதம்.

2018-2019-ம் கல்வியாண்டில் புதிய பல்வகை தொழில் நுட்ப கல்லூரிகளை அரசு தொடங்கியதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. 2019-2020-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணம் திருப்பி வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டிற்கு 460 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று எதிர்ப்பு இருந்த அந்தக் காலத்திலேயே, அந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றதோடு மட்டுமல்லால், பெண்கள் உரிமையை காக்க பத்திரிகை நடத்தி, மகளிருக்காக சமூக நிறுவனங்களை நிறுவிய கமலா சத்தியநாதன் போன்று நீங்களும் வாழ்வில் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வர ஒரு தூண்டுகோலாகத் திகழவேண்டும்.

மாணவிகள் படிக்கும்போது கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்க வேண்டும். உங்களது பெற்றோர்கள் உங்கள் வாழ்வு சிறக்க பல கனவுகள் காண்கின்றார்கள். அவர்களின் கனவை நனவாக்க நீங்கள் பாடுபட வேண்டும். உங்களுக்கு சமுதாய பொறுப்பு இருக்கிறது. எளிதாக தட்டி கழித்து விட முடியாத பொறுப்பு உள்ளது. உங்களை வளர்த்துவிட்ட நிறுவனத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். நமது குறிக்கோள் கல்வியை நல்ல முறையில் கற்பது. பின்னர் நாம் படித்த இந்த கல்வியை கொண்டு, நாட்டிற்கு நல்லது செய்வதாகும்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்த்தல், நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்ய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துத்தல், நீர்வள ஆதார இயக்கம் பற்றி மக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், நாட்டின் நலனில் அக்கறையுள்ள ஒரு நல்ல குடிமகனாக தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் மற்றவர்கள் களவாடி விடுவார்கள். நம் உயிர் இருக்கின்றவரை ஒட்டி இருக்கின்ற ஒரே செல்வம் கல்விச்செல்வம் மட்டும் தான். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வேளாளர் மகளிர் கல்லூரி உங்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றது, அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாங்கள் படிக்கின்றபோது நடந்தே சென்று பள்ளிக்கு சென்றோம். நான் எங்கள் ஊரிலேயிருந்து ஆற்றைக் கடந்து பவானி வந்து படித்துக் கொண்டிருந்தேன், ஆற்றிலே தண்ணீர் நிறைந்துவிட்டால் பரிசலில் சென்று படிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கின்றது. குறித்த காலத்தில் நீங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியும், சிறந்த கல்வியை கற்க முடியும். அதுமட்டுமல்லாமல், இப்போது அரசாங்கம் நிறைய சலுகைகளை கொடுக்கிறது.

டுவிட்டர், வாட்ஸ் அப், யூடியூப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளாகிய நீங்கள் மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ வேண்டும். மாணவிகள் உயர்கல்வி படித்து, மென்மேலும் வளர்ந்து உங்கள் பெற்றோர்களுக்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story