குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு, பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுளிப்பட்டியை அடுத்த எல்லப்பட்டியில் காட்டுசெங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அருகே உள்ள தோட்டங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக இந்த குளத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் குளத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தை சுற்றி ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. மண் அள்ளப்படுவதால் குளத்தை ஒட்டியுள்ள தென்னை மரங்கள் பிடிமானம் இல்லாமல் சாய்ந்து விழும் நிலை உள்ளது.
தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக் கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று குளத்தில் மண் அள்ள வந்த பொக்லைன் எந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து மண் அள்ள வந்த பொக்லைன் எந்திரம், 3 லாரிகளையும் சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
Related Tags :
Next Story