பழனி நகரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
பழனி நகரில், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகாவில் இருந்து தினசரி பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் பழனி பஸ்நிலையம், சன்னதி வீதி, ரெயில்வே பீடர் ரோடு மற்றும் கிரிவீதிகளில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும். இதைத்தொடர்ந்து நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல இடங்களில் நகராட்சி மற்றும் போலீஸ் துறை சார்பில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி நகரின் முக்கிய வீதிகள், தெருக்கள், சாலையோரங்கள், நடைபாதைகளை வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் பூஜைப்பொருட்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் நகர் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்துக்குபுகார் வந்தது.
இதைத்தொடர்ந்து பழனி நகரில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக் கப்பட்ட கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் நாராயணன் உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை அடிவாரம் சன்னதிவீதி, ரெயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரம், நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, லாரிகளில் ஏற்றினர். அப்போது சில வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ஒருபுறமிருக்க சில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றினர்.
பொதுமக்கள், பக்தர்களுக்கு இடையூறாக சாலையோரங்கள், நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆக்கிரமிப்பு பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story