ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்


ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 5:54 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்களை பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோடு,

ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியின் பொன்விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் அரசு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அங்கு புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.58 கோடியே 54 லட்சம் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை நான் தொடங்கி வைத்தேன். பின்னர் பாலம் கட்டி முடித்த பிறகு நானே அந்த பாலத்தை திறந்து வைத்து பேசினேன். அப்போது, ஈரோடு பெருந்துறைரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடி செலவில் சுமார் 5½ கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தேன். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும், ஈரோடு கருங்கல்பாளையத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் புதிய மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ரூ.29 கோடியே 90 லட்சம் செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதேபோல் ஈரோடு சாஸ்திரி நகரில் ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு சுற்றுச்சாலை அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. நிலத்தின் உரிமையாளர்கள் 12 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு முடிந்த பிறகு விரைவில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்.

பவானியில் சாலையோரம் கடைகள் இருப்பதால் சாலை விரிவாக்கம் செய்ய முடிவதில்லை. இதனால் புறவழிச்சாலை அமைக்க நில அளவீடு பணிகள் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-ஈரோடு சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற ரூ.270 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. மேலும், கோபி பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோபி கரட்டடிப்பாளையத்தில் இருந்து பங்களாப்புதூர் செல்லும் வழியில் 70 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. அங்கு புதிய மேம்பாலம் கட்டப்படும். ஈரோடு திண்டலில் இருந்து வில்லரசம்பட்டி வழியாக கனிராவுத்தர்குளம் செல்லும் சாலை பல்வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது. மேட்டுப்பாளையம்-பவானி, பவானி-கரூர் ஆகிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.67 கோடியே 76 லட்சம் செலவில் உயர் சிகிச்சைக்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. கோபி அருகே கணக்கம்பாளையத்தில் ரூ.64 கோடி செலவில் புதிய ஏரி அமைக்கப்படுகிறது. இதன்மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதியை பெறும். மேலும், பவானி அருகே ஜம்பையில் ரூ.18 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட உள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவருடைய ஆசியுடன் நடக்கும் இந்த ஆட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இன்னும் 3 மாதங்களில் நான் நேரடியாக வந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தை பொதுமக்களுக்கு தொடங்கி வைக்க உள்ளேன் என்பதை பெருமையாக தெரிவித்து கொள்கிறேன். எனவே ஈரோடு மக்களின் பெரும்பாலான கோரிக்கையை இந்த அரசு நிறைவு செய்து இருக்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story